கொரோனா அச்சத்தில் தனக்கு தானே தீமூட்டிக் கொண்டு இறந்த மூதாட்டி
வத்தளை: கொரோனா வைரஸ் தொற்றும் என்ற அச்சத்தில் ஒரு பெண் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக வத்தளை பகுதியில் இடம் பெற்றுள்ளது
வத்தளை ஹுனுபிட்டியில் உள்ள வெடிகந்த பகுதியில் 73 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயானவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகராட்சி கூடுதல் கொரோனர் ஈரேஷா தேஷனி சமரவீர முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
“என் அம்மா இறந்துவிட்டார். அம்மாவுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அம்மா என்னுடன்தான் இருந்தாள். எனது வீட்டில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அம்மா எப்போதும் வானொலியில் வரும் செய்திகளைக் கேட்பார். அந்தச் செய்தியைக் கேட்பது வேதனை அளிக்கிறது என்று அவர் அடிக்கடி கூறுகிறார். அன்று இரவு சுமார் 9.00 மணியளவில் நான் அறையில் இருந்தேன், ஜன்னலிலருகே ஒரு நிழல் நடமாடுவதைக் கண்டேன். பின்னர் நான் வெளியே சென்று பார்த்தேன். நான் நின்ற இடத்திலருந்து 20 முதல் 30 அடி தூரத்தில் ஒரு மெழுகுவர்த்தி எரிவதைக் கண்டேன். இருட்டில் நிற்பது யார் என்று நான் கேட்டபோது, என் அம்மா என்னை அருகில் வர வேண்டாம் என்று கத்தினார். நான் நெருங்கும் போதே அவர் தீ வைத்துக் கொண்டார். நான் தீயை அணைக்க முயன்றபோது என் கையும் எரிந்தது, ”என்று அந்த பெண்ணின் மகன் கூறினார்.
சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், தீ விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டது என்றும், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.