பௌத்த ஆதரவுத் தளத்தை திசை திருப்புகின்றார் சஜித் – கோட்டா தெரிவிப்பு
“பௌத்த தேரர்களின் ஆசீர்வாதத்துடன் சிங்கள பௌத்த மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன். இந்தநிலையில், ஒரு சில தேரர்களினதும் மக்களினதும் அரசு மீதான விமர்சனங்களைக்கொண்டு ஒட்டுமொத்த பௌத்த தேரர்களையும் சிங்கள பௌத்த மக்களையும் எமக்கு எதிராகத் திசைதிருப்பும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியினர் களமிறங்கியுள்ளனர். அவர்களின் இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பேராதரவுடன் நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டேன். அதேவேளை, கடந்த நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களின் அமோக வாக்குகளினால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் எமது அரசு உருவாகியுள்ளது.
எனவே, நாம் எதற்கும் அஞ்சாது – எந்தத் தரப்புக்கும் அடிபணியாது மனத்தைரியத்துடன் எமது எதிர்காலக் கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்து அதை நிறைவேற்ற வேண்டும். நாட்டை சகல துறைகளிலும் மேலோங்கச் செய்ய வேண்டும்” – என்றார்.