தியானம்
நாம் அனைவரும் ஜென் குரு அல்ல. ஆயிரம் எண்ணங்கள் அலையடிக்கும் மனது நம்முடையது. ஆசை, அச்சம், கோபம், காமம், வெறுப்பு, பகை என்ற சிலந்திவலைப் பின்னலில் சிக்கித் தவிப்பவர்கள். நெருப்புக்கும் வெள்ளத்துக்கும் நடுவில் நிற்பதுபோல், நல்ல எண்ணங்களும், தீய விருப்பங்களுக்கும் இடையில் நடப்பதே வாழ்க்கை. ‘நல்லதையே நாடு’ என்று அறிவு சொல்கிறது. எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று மனக் குரங்கு தினமும் பாடம் நடத்துகிறது. இந்தக குழப்பத்திலிருந்து எப்படி எப்போது நமக்கு விடுதலை என்பதுதான் கேள்வி?
நாம் ஒன்று செய்வோம். காலை-மாலை இரு வேளையும் தனிமையில் கொஞ்ச நேரம் கண்மூடி மெளனமாக அமர்ந்து உள்முகமாக யோசிப்போம்.
நமது பலம்-பலவீனம், நிறை-குறைகளை நெஞ்சில் நிறுத்தி அன்றாடம் அலசுவோம். தவறுகளைத் தவிர்க்க முடிவெடுப்போம். பகையை வேரறுத்து, அன்பை விதைத்து விருட்சமாக வளர்க்க முயலுவோம். ஒரே பிறவியில் புத்தனாக முடியாது என்கிறது பெளத்தம். ஒரே நாளில் நாம் அனைவரும் முனிவர்களாகிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற உள்முகத் தேடலில் ஈடுபடுவோம். எத்தனை நாள்தான் வெளியே தேடி, வாழ்வை வீணாக்குவது? விழிப்பு உணர்வு இல்லாத விலங்குகளா நாம்? தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு, தினமும் பத்து நிமிடமேனும் கண்மூடி தியானிப்போம்.