யாழில் திடீர் சுற்றிவளைப்பு! – 36 பேர் கைது
யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட 4 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 25.5 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை தினத்தை முன்னிட்டு 24ஆம், 25ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசேட தடுப்பு காவல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பண்டிகை நாட்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்குடன் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் பேரில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது நேற்றிரவு 4 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 36 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் 25.5 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது.
இதில் சந்தேகத்தின் பேரில் 14 பேரும், நீதிமன்றப் பிடியாணையின் பேரில் 6 பேரும், குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு வந்ததாக தேடப்பட்டு வந்த 6 பேரும் கைதுசெய்யப்பட்டனர். யாழில் 1.5 லீற்றர் கசிப்பும், கொடிகாமத்தில் 24 லீ ற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது.
மேலும், வீதி தடுப்பு காவல் நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 6 பேரும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 3 பேரும், ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். 27 வீதி போக்குவரத்து மீறல் குற்றங்களும் பதியப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.