ரஜினி உடல்நிலை இப்போது எப்படி? – அப்பல்லோ மருத்துவமனை
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இன்று காலை 10:30 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு அதிகமான அளவில் இருப்பதால் அவருடைய இரவு அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் அபாயகரமான எதையும் வெளிக் காட்டவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பில் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்துக்கு இன்று அப்பல்லோ மருத்துவமனை மேலும் அதிக உடல்நல பரிசோதனைகளை செய்ய உள்ளது. அவற்றின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.
ரஜினிகாந்த் தொடர்ந்து நெருக்கமாக கண்காணிக்கப்படுவார், அவரைப் பார்க்க வருகை தருபவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தம் எந்த அளவு கட்டுப்பாட்டுக்கு வருகிறது என்பதைப் பொருத்து ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்றைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்
ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துவருகிறார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் மீண்டும் துவங்கியது. இதற்காக தனி விமானத்தில் அவர் ஹைதராபாத் சென்று, படப்பிடிப்பில் பங்கேற்றார்.
இந்த நிலையில், அந்தப் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 22ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
தற்போது 70 வயதை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், சில ஆண்டுகளுக்கு முன்பாக சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.