முல்லைத்தீவில் இயற்கை அனர்த்தத்தில் மரணித்த மக்களை அஞ்சலித்து நினைவுகூரும் நிகழ்வு.
2004.12.26 அன்று இடம்பெற்ற சுனாமி ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தில் மரணித்த மக்களை அஞ்சலித்து நினைவுகூரும் நிகழ்வு இன்று 26.12.2020 சனிக்கிழமை காலை முல்லைத்தீவு சுனாமி பேரலை நினைவாலயத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்திரு யாவில் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை 6.00 மணிக்கு யாழ். மறைமட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதனின் சகோதரி திருமதி செபநாதன் அவர்கள் சுனாமி பேரலை நினைவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அருட்பணி ஜேம்ஸ் பத்திநாதனின் உருவச்சிலையை திறந்துவைக்க, குருமுதல்வர் அவர்கள் நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார். பங்குத்தந்தை அருட்திரு யாவிஸ் அவரகள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து சிலை வடிவமைத்த திரு.நிரஞ்சன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். உருவச்சிலைக்கான கட்டிட வடிவமைப்பு வன்னியன் கட்டிடக்கலைஞர்களினால் முன்னெடுக்கப்படதுடன் முல்லைத்தீவு பங்குமக்கள் பலரின் பங்களிப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளது.
அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதன் அவர்கள் சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்றபோது முல்லைத்தீவு பங்குத்தந்தையாக பணியாற்றியதுடன் அனர்த்தம் நடைபெற்ற அன்றைய தினம் நடைபெற்ற ஞாயிறு திருப்பலியை முல்லைத்தீவில் அமைந்துள்ள புனித சூசையப்பர் சிற்றாலயத்தில் நிறைவேற்ற தீர்மானித்தமையால் சுனாமி அனர்த்தத்திலிருந்து நுற்றுக்கணக்கானவர்கள் பாதுகாக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.