கொரோனாத் தொற்று அதியுச்சம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குங்கள்!
அரசிடம் சஜித் அணி அவசர கோரிக்கை
“கொரோனா வைரஸின் பேராபத்திலிருந்து மீண்டெழுவதற்காக நாடு முழுவதும் குறைந்தது மூன்று வாரங்களுக்காவது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.”
– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா.
இது தொடர்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள்தோறும் சராசரி 500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதேவேளை, மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. எனவே, இந்தப் பேராபத்திலிருந்து மீண்டெழுவதற்காக நாடு முழுவதும் குறைந்தது 3 வாரங்களுக்காவது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் ஆரம்பத்திலிலேயே கம்பஹா மாவட்டத்தை முடக்கம் செய்திருந்தால் நாடு முழுவதிலும் தொற்றுப் பரவாமல் தடுத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு அதைச் செய்யவில்லை என்பதால்தான் இந்தப் பேராபத்தை நாடு அரசு எதிர்கொள்ள நேரிட்டுள்ளது” – என்றார்.