ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாக தகவல்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் (வயது 70) தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது.
தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அடுத்த மாதத்துக்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி படப்பிடிப்பு பணிகளும் வேகவேகமாக நடந்தன. அவரும் இரவு, பகலாக மும்முரமாக நடித்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று தெரியவந்தது. எனினும் பாதுகாப்பு கருதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் உடன் இருந்தார்.
இந்த சூழலில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பரிசோதனை தேவைப்படுவதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பின்னர் அறிக்கை வெளியிட்டது.
அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், நாடித்துடிப்பு உள்ளிட்ட பிற செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேவையான சிகிச்சைகளையும் வழங்கினர். இதனால் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவில் நன்றாக ஓய்வு எடுத்தார். நேற்று (நேற்று முன்தினம்) இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்றாலும் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.
ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அபாயகரமான நிலை எதுவுமில்லை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.
மாறி மாறி இருக்கும் அவரது ரத்த அழுத்தத்தை கருத்தில்கொண்டு, முழுமையான ஓய்வு எடுக்கும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் நேற்று மாலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன. அவற்றின் அடிப்படையிலும், இன்று (நேற்று) இரவில் அவரது ரத்த அழுத்த நிலவரத்தின் அடிப்படையிலும், அவரை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது குறித்து நாளை (இன்று) காலையில் முடிவு செய்யப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
 
எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு
இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது அவர், ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோரும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.
மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி ஆகியோர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.