ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவிப்பு.
கப்டன் ரகானே சதம் அடித்து அசத்தல்: இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்றைய 2வது நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 45 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் புஜாரா 17 ரன்களில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். அடுத்ததாக கேப்டன் ரகானேவுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் விஹார் 21 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ரகானேவுடன், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இதனிடையே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரகானே, 111 பந்துகளில் அரை சதம் கடந்தார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே, ஜடேஜா ஜோடியால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. இடையில் மழை குறுக்கிட்ட போதும் சீரான வேகத்தில் இந்திய அணி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரகானே 195 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 12வது சதமாகும்.
பின்னர் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது இந்திய அணி 91.3 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் சார்பில் ரகானே 104 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நாதன் லைன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.