திரையரங்குகளை ஜனவரி முதலாம் திகதி முதல் திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!

திரையரங்குகளை ஜனவரி முதலாம் திகதி முதல் திறப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்!

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அனுமதியளித்துள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும்.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமையினால் கலைக்கும், கலைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் சமீபத்தில் கௌரவ பிரதமருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அதன் பிரதிபலனாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

திரைப்படத்துறையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்று தெரிவித்த கௌரவ பிரதமர், கொவிட்-19 காரணமாக திரையரங்குகளை மூடுவதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கும், திரைப்பட தயாரிப்பாளர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடி மற்றும் திரைப்பட துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து கலைஞர்கள், பல்வேறு தொழில் வல்லுனர்கள் முகங்கொடுத்துள்ள பாதிப்புகளை தவிர்த்தல் மற்றும் இரசிகர்கள் குறித்து கவனம் செலுத்தி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

திரையரங்குகளை திறக்கும்போது குறித்த திரையரங்குகள் உரிய முறையில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர் அவர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு திரையரங்குகளுக்கு வருகைத்தருவோரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொவிட்-19 சவாலுக்கு மத்தியில் கலைஞர்களையும், திரைப்படத் துறையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் பல கலைஞர்கள் கௌரவ பிரதமரின் இத்தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.