குடியுரிமை அல்லாதவர்கள் நாட்டுக்குள் நுழைய தடை.
ஜப்பான் தனது குடியுரிமை அல்லாதவர்களை நாட்டுக்குள் நுழைய தடை.
பிரித்தானியாவில் பரவத்தொடங்கியுள்ள புதிய வைரஸ்
தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கனடா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஜப்பான் நாளை திங்கட்கிழமை முதல், குடியுரிமை பெறாத பெரும்பாலான வெளிநாட்டவர்களை அந்நாட்டுக்குள் நுழைய, அடுத்த ஒரு மாத காலத்துக்கு தடை விதிக்க இருக்கிறது.
ஜப்பானுக்கு வந்த ஐந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவியிருக்கிறது. இதில் ஒருவருக்கு உள்நாட்டில் இருந்த ஒருவர் மூலமாகவே பரவியிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இதேவேளை கனடாவின் ஒன்டாரியோ நகரில் ஒரு தம்பதி கொரோனா வைரஸின் புதிய திரிபால் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கவில்லை அல்லது அதிக நோய் தொற்று ஆபத்து உள்ளவர்களுடன் கூடியவர்களுடன் எந்தவித தொடர்பிலும் இருந்ததாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் மூன்று பேருக்கு புதிய திரிபு வைரஸ் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் இரண்டு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.
பிரான்சில் Tours நகரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்சுக்கு வந்திருந்த குறித்த நபர், சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
புதிய வடிவ வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனிதர்களை தொற்றும் வைரஸின் திறனை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
ஆனால் புதிய திரிபு வைரஸ் பரவியவர்களுக்கு எந்த வித கூடுதல் அபாயம் இல்லை என்பதுடன் அதிக ஆபத்தானது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.