சரணாகதியா? தனிவழியா? 30இல் சுதந்திரக் கட்சி முடிவு.
சரணாகதியா? தனிவழியா?
30இல் சுதந்திரக் கட்சி முடிவு.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி இரவு 7 மணிக்கு கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் அதிருப்தியிலேயே இருக்கின்றது. தமது கட்சிக்கு உரிய கவனிப்புகள் இல்லை என சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். எனினும், ஆளுங்கூட்டணியிலிருந்து வெளியேறுவதா, இல்லையா என்பது தொடர்பில் அக்கட்சி எதனையும் அறிவிக்கவில்லை.
ஆனாலும் சு.கவிலுள்ள ஒரு சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன், மாகாண சபைத் தேர்தலில் தனித்து அல்லது எதிரணியுடன் கூட்டணி அமைத்து களமிறங்க வேண்டும் என்ற யோசனையும் சுதந்திரக் கட்சிக்குள் ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அக்கட்சியின் மத்திய செயற்குழு கூடுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்துப் பேச வேண்டிய விடயங்கள் பற்றியும் இங்கு விவாதிக்கப்படவுள்ளன.