தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கலா? விளைவுகளைச் சந்தித்தே தீரும் ராஜபக்ச அரசு : சந்திரிகா அம்மையார் எச்சரிக்கை

‘உதயன்’ உள்ளிட்ட தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கல் செய்ய அரசு முனைந்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இலங்கை ஜனநாயக நாடு என்றால் பத்திரிகைச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் இருக்க வேண்டும். இதை இந்த அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும். இல்லையேல் அதன் விளைவுகளை விரைவில் சந்தித்தே தீரும்.

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் அரசை தீர்மானிக்கும் வல்லமை ஊடகங்களுக்கும் இருக்கின்றது. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை வைத்தே யாரை ஆட்சியில் அமர்த்துவது என்ற தீர்மானத்தைப் பெரும்பாலான மக்கள் எடுப்பார்கள்.

இந்தநிலையில், ஊடகங்கள் மீது மீண்டும் ராஜபக்ச அரசு கைவைக்க ஆரம்பித்துள்ளது. அதனால் பாரிய விளைவுகளை அரசு சந்திக்க வேண்டிவரும்.

2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்குப் பெரும்பாலான ஊடகங்களின் ஒற்றுமையான பணியே காரணம். ஏனெனில், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வடக்கிலுள்ள ஊடகங்களும், தெற்கிலுள்ள ஊடகங்களும் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தன. ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டனர். பலர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர். சிலர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் சந்தித்த அவலங்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

ஊடகங்கள் மீது கைவைத்த காரணத்தால்தான் மஹிந்த ராஜபக்ச அரசு சர்வதேச ரீதியில் அவப்பெயரைச் சுமக்க நேர்ந்தது. அதனால் ஆட்சியும் கவிழ்ந்தது.

கடந்த நல்லாட்சியில் ஊடகங்கள் முழுச் சுதந்திரத்துடன் இயங்கின. எனினும், 2019ஆம் ஆண்டு நவம்பரில் துரதிஷ்டவசமாக ஆட்சி மாறியது. அதற்குப் பின்னால் பாரிய சதி நடவடிக்கைகள் மறைந்து இருக்கின்றன.

தற்போதைய புதிய ஆட்சியில் – ராஜபக்ச குடும்பத்தின் மீள் எழுச்சியில் ஊடகங்கள் மீண்டும் நெருக்குவாரங்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.