முடக்கப்படுமா புதுக்குடியிருப்பு? – சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கடந்த இரவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் தொடராக புதுக்குடியிருப்பு முடக்கப்படுமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குறித்த தொற்றாளர் தகவல் வழங்கியதன் அப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் அவர் நேற்று ஐயப்பன் கோயில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையால் அந்த வழிபாட்டில் பங்கேற்ற நபர்கள் ஆகியோர் குடும்பங்களுடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் குறித்த தொற்றாளர், புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாமல் விசுவமடு வரையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பெருமளவானோருடன் தொடர்பிலும் இருந்து வந்துள்ளார்.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்விடுத்து வருகின்றோம்.
புதுக்குடியிருப்பு சந்தை முடக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களின் வியாபாரிகளும் பணியாளர்களும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படும் என்றாலும் புதுக்குடியிருப்பை முடக்கும் உத்தேசம் இல்லை.
இதனிடையே தொற்றாளர் தொடர்பில் அவதானிப்பை மேற்கொண்டுவந்த பொதுச்சுகாதார உத்தியோகத்தர் முன்வைத்த பரிந்துரைக்கு அமையவே குறித்த தொற்றாளர் உட்பட12 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்” – என்றார்.