மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றி எவரும் வாய்திறக்கக்கூடாது என சரத் வீரசேகர மிரட்டல்
புதிய அரசமைப்பே முதலில் வேண்டும்
மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றி எவரும்
வாய்திறக்கக்கூடாது என சரத் வீரசேகர மிரட்டல்
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசமைப்பை உடன் நிறைவேற்ற வேண்டும். அதுவரைக்கும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எவருமே வாய்திறக்கக்கூடாது.”
– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.
காலி பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, மாகாண சபைகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தப் பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும்.
நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் முன்னெடுக்கும் வகையிலான புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.
அதுவரைக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
இந்த நிலைப்பாட்டிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். எனது இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் என்று நம்புகின்றேன்” – என்றார்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசால் ஆராயப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் யோசனையொன்றை முன்வைத்ததுடன், அந்த யோசனை தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி கலந்துரையாடுவதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.