கொரோனா வைரஸால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம்!

கொரோனா வைரஸால் இறந்தவர்களை
அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டாம்!
கொழும்பில் பௌத்த தேரர்கள் போர்க்கொடி;
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பதற்றம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கோரி, பௌத்த அமைப்புகள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
தேசிய அமைப்புகளின் ஒன்றியம், புதிய சிங்கள ராவய, சிங்கலே அமைப்பு உட்பட பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஒன்றிணைந்து, கொழும்பு காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பௌத்த தேரர்கள் பொலிஸ் தடுப்புகளை மீறி ஜனாதிபதி செயலகத்தினுள் நுழைய முயற்சித்தபோது, அங்கு பதற்ற நிலையும் ஏற்பட்டது.
ஜனாதிபதியிடம் செய்தி மடலொன்றைக் கையளிக்கவே தாம் ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்ல முற்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சுகாதார அமைச்சர் அங்கு வந்தார். அவரிடம் மக்களைத் தெளிவூட்டுவதற்கான செய்தி மடல் கையளிக்கப்பட்டது.
நாட்டில் அனைவருக்கும் ஒரு சட்டமே இருக்க வேண்டும் என்றும், கொரோனாத் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.