மாஸ்டர் படம் தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடியை திடீரென சந்தித்த விஜய்
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 13 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த நிலையில், திரைத்துறைக்குச் சாதகமாகத் திரையரங்குகளையும் திறக்கலாம் என்று அறிவித்தது.ஆனால், திரையரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து விஜய் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தனர். பாதி திரையரங்கில் மட்டுமே ரசிகர்களை அனுமதித்தால் வசூல் பாதிக்கும். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதே போல் பெரிய திரைநட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒளிபரப்பாகும் அதற்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இந்த கோரிக்கைக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதால், அதற்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நினைத்தது விஜய் தரப்பு.
இந்த நிலையில் மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் திடீர் என சந்தித்தார். தியேட்டர்களில் பாரவையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
படத் தயாரிப்பாளர் லலித் குமார் , அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் ஆகியோர் உடன் இருந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.