ஆயுதம் காட்டச் சென்ற நபர் பொலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி
இன்று காலை வேயங்கொட பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பல குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டபோது போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கலகெடிஹேனாவின் ஹல்கம்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் வேயங்கொடவின் பெவன்வத்தவில் வசிக்கும் நிஷாந்த குமாரசிறி (37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேலியகொடை குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபரை ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு போகும் போது கைவிலங்கால் சாரதியின் கழுத்தை நெரித்துள்ளார். அதன் போது வாகனம் சாலையில் இருந்து விலகிச் சென்று நின்ற வேளையில் தப்பி ஓட முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காயமடைந்த சந்தேக நபரை வத்துப்பிட்டிவல மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு தனது போதைப்பொருள் பரிவர்த்தனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நபரது கால் ஒன்றை வெட்டி எடுத்துச் சென்ற சம்பந்தப்பட்ட நபர் , மறுநாள் வெட்டிய காலை கொண்டு வந்து போட்டு விட்டுச் சென்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த தகவல் கொடுத்த நபர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வெறிச்சோடிய தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையெறி குண்டுகளையும் , உள்ளூர் கல்லறைக்கு அருகே இருந்து இரண்டு வாள்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.