விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா ஆல் ரவுண்டர்
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில வருடங்களாக விராட்கோலி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவருக்குப் பின் புஜாரா,ரோகித் சர்மா, ரகானே, மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்திய ஆல் ரவுண்டர் ஒருவர், டெஸ்ட் போட்டிகளில் அபரீத வளர்ச்சி அடைந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் நட்சத்திர வீரர் என அனைவராலும் பாராட்டப்படுகிறார்.
அவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட பேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளார் ஜடேஜா. தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஜடேஜா 20 போட்டிகளில் 743 ரன்கள் குவித்து உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 57.15 ஆகும். ஒரு சதமும் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 14 போட்டிகளில் 740 ரன்கள் எடுத்து 56.92 சராசரி வைத்துள்ளார்.
விராட் கோலி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அவர் 41 இன்னிங்க்ஸ்களில் 2050 ரன்கள் குவித்து 52.56 சராசரி வைத்துள்ளார். மயங்க் அகர்வால் 50.00, ரஹானே 41.38 சராசரியுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.
இப்படி முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரையும் விட அதிக சராசரியுடன் முதல் இடத்தில் இருக்கிறார் ஜடேஜா. சமீபகாலமாக தன் பந்து வீச்சுக்கு இணையாக தனது பேட்டிங்கையும் வலுப்படுத்தி வருகிறார் ஜடேஜா.