சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு.
சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடும்
பணிகள் இராணுவத்திடம் ஒப்படைப்பு.
இலங்கையில் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணியை 2021 ஜனவரி முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 வருடங்களாகத் தென்னாபிரிக்க நிறுவனமொன்றே இலங்கையின் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிட்டு வந்தன. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மீது கணக்காய்வு திணைக்களம் நடத்திய விசாரணையில் மில்லியன் கணக்கான பாரிய இழப்பு இலங்கைக்கு ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.
இதையடுத்தே, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை குறைந்த செலவில் அச்சிடும் பணியை இராணுவம் பொறுப்பேற்கவுள்ளது.
ஒரு மாதத்தில் 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு ஒரு வருடத்துக்கு கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்காதிருப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
குறித்த திட்டம் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கனரக வாகன சாரதி விண்ணப்பதாரர்கள் கடந்த ஒரு வருடத்துக்குள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை ஆராய சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இதையடுத்தே, அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனரக வாகன சாரதி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.