2024 ஜனாதிபதித் தேர்தலிலும்  சஜித்தே வேட்பாளராகப் போட்டி – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு.

2024 ஜனாதிபதித் தேர்தலிலும் 
சஜித்தே வேட்பாளராகப் போட்டி
ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

“2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே போட்டியிடுவார்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

2024 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது தரப்பு வேட்பாளரின் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி மற்றும் கூட்டணியின் தலைவர்தான் வேட்பாளராக களமிறங்குவது சம்பிரதாயம்.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸ பதவி வகிக்கின்றார். எதிர்காலத்தில் அமையவுள்ள கூட்டணியின் தலைவராகவும் அவரே செயற்படுவார். எனவே, சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்பது தெளிவு.

ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பலமான வேட்பாளரும் அவரே. அவரைவிட மாற்றுவழி இல்லை. அதற்கான தேவையும் எழாது.

இந்த அரசு நாட்டை வங்குரோத்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றது. பொருளாதாரம் மற்றும் நிதித்துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் அதற்கான அணி ஐக்கிய மக்கள் சக்தியாகும். அந்த சக்தியின் பின்னால் மக்கள் அணிதிரளவேண்டும்” – என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.