மாகாண சபைத் தேர்தல் இப்போதைக்கு இல்லை.
மாகாண சபைத் தேர்தல்
இப்போதைக்கு இல்லை.
மேலும் சில காலத்துக்கு ஒத்திவைக்க
ஆளும் கட்சிக் கூட்டத்தில் யோசனை
மாகாண சபைகளுக்கான தேர்தலை அவசரமாக நடத்தாது, மேலும் சில காலத்துக்கு ஒத்திவைப்பதற்கு அரசுக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் அமைச்சரவைக்குச் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று நிலைமையில், தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பாகக் கட்சித் தலைவர்கள் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, அவசரமாக தேர்தலை நடத்தாது, புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் சிலர் குறிப்பிட்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்தக் கூட்டத்தில் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக மீண்டும் கலந்துரையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது எனவும் எஸ்.எம்.சந்திரசேன அவர் மேலும் கூறினார்.