மாவையின் செயற்பாட்டினால்தான் யாழ். மாநகர சபையை இழந்தோம் : சுமந்திரன் காட்டமான கடிதம்
தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோதமான
மாவையின் செயற்பாட்டினால்தான்
யாழ். மாநகர சபையை இழந்தோம்
– சுமந்திரன் காட்டமான கடிதம்
” உங்களுடைய தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ் மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ் மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன்.”
– இவ்வாறு காட்டமாகத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
இன்று காலை யாழ். மாநகர சபை மேயர் தெரிவு நடந்த கையோடு இந்தக் கடிதத்தை அவர் அனுப்பிவைத்திருக்கின்றார். அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:-
திரு.மாவை சேனாதிராஜா
தலைவர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
30, மார்டின் வீதி
யாழ்ப்பாணம்.
ஐயா,
யாழ்ப்பாண மாநகர சபை
……………………………………………
இன்று யாழ். மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது.
வரவு – செலவுத் திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற காரணத்தால் எமது மேயர் பதவி இழந்ததை அடுத்து நடந்த நிகழ்வுகளை இங்கே வரிசைப்படுத்த விரும்புகிறேன்:-
19/12/20 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் சந்தித்ததை அடுத்து, வீட்டு வாசலில் வைத்து யாழ். மாநகர சபைக்கு புதிய மேயர் வேட்பாளராக வேறொருவரை நியமிப்பதே உசிதம் என்றும், அதற்குப் பொருத்தமானவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் என்பது என்னுடைய கருத்து என்பதையும் கூறினேன்.
21/12/20 அன்று நீங்கள் எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து, நான் சொன்ன கருத்தோடு நீங்கள் உடன்படுவதாகவும், இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கருத்தும் சொலமன் சிறில் என்பதே என்றும் சொன்னீர்கள். நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதாகவும், அங்கே உறுப்பினர்களோடு நடத்தும் கூட்டத்துக்கு என்னை வரமுடியுமா என்றும் கேட்டீர்கள். கட்சியின் சார்பில் அரசமைப்பு யோசனைகள் நிறைவு செய்யும் வரை என்னால் வரமுடியாது என்றும், சொலமன் சிறில் வேட்பாளராக வருவதில் எனக்கு உடன்பாடு உள்ளது என்றும் கூறினேன். எப்படியாயினும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பதாக என்னோடு திரும்பவும் பேசுவதாகக் கூறியிருந்தீர்கள்.
எட்டு நாட்களுக்குப் பிறகு நேற்று 29/12/2020 காலையில் நீங்கள் எனக்குத் தொலைபேசி அழைப்பெடுத்து மாநகர சபை உறுப்பினர்களில் அநேகமானவர்கள் ஆனோல்டையே திரும்பவும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும், இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக காலை 10.30 மணிக்கு கூட்டம் ஒன்று நடத்தப்போவதாகவும் சொன்னீர்கள்.
நான் கொழும்பில் இருந்து பிரயாணமாகி வந்துகொண்டிருக்கின்றேன் என்றும், மதியம் ஒரு மணிக்குப் பின்னரே யாழ்ப்பாணத்துக்கு வந்தடைவேன் என்றும், அதற்குப் பின்னர் கூட்டத்தை நடத்தினால் நான் கலந்துகொள்வேன் என்றும் உங்களுக்கு நான் அறியத்தந்தேன்.
அதே தொலைபேசி உரையாடலில், புதிய மேயர் வேட்பாளர் சம்பந்தமாக எனது நிலைப்பாட்டைத் தெளிவாக திரும்பவும் கூறினேன்:-
வரவு – செலவுத் திட்டம் தோல்வியுற்றால் இராஜிநாமா செய்ய வேண்டியது ஒரு ஜனநாயக விழுமியம் மட்டும் அல்ல, அது ஒரு ஜனநாயக மரபாகவும் இருந்திருக்கின்றது. இந்த மரபு பின்பற்றப்படாத காரணத்தால்தான் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு “இராஜிநாமாச் செய்தவராக கருத வேண்டும்” என்று அது ஒரு சட்டத்தின் தேவைப்பாடாகவும் ஏற்படுத்தப்பட்டது.
சட்டத்தின் செயற்பாட்டால் இராஜிநாமா செய்தவர் ஆனவர் மீண்டும் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவது சட்டத்துக்கு முரணானது மட்டும் அல்லாமல் ஜனநாயக விழுமியங்களையும் மீறுகின்ற செயலாகும்.
ஆகையால் இராஜிநாமா செய்தவரான ஆனோல்ட்டைத் தவிர வேறொருவரைத்தான் எமது வேட்பாளராகத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை திட்டவட்டமாகச் சொன்னேன்.
வரவு – செலவுத்திட்டத்தின் தோல்வியின் காரணமாக இராஜிநாமா செய்தவர்களை மீளவும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தமது கட்சி அதை எதிர்க்கும் என்றும், அப்படி அல்லாது வேறு எவரையேனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால், தாம் ஆரதவு கொடுப்போம் என்றும் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு எமது கட்சி வேட்பாளரை வேறு கட்சியினர் தெரிவு செய்யும் செயற்பாடு அல்ல. நான் மேற்சொன்ன ஜனநாயக விழுமியத்தின் அடிப்படையிலான அறிவிப்பே அது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கருத்துக்கு மாறாகவும், நீங்கள் எனக்குச் சொன்ன தங்களது சொந்தக் கருத்துக்கே மாறாகவும், தன்னிச்சையாக நேற்றுக் காலை 10.30 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யாழ். மாநகர சபை மேயர் பதவிக்கு, ஏற்கனவே இராஜநாமா செய்தவரான ஆனோல்ட்டையே வேட்பாளராக அறிவித்திருந்தீர்கள்.
உங்களுடைய மேற்சொன்ன, தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை மேயர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம்.
தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ். மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன்.
இப்படிக்கு,
எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் –
யாழ்ப்பாணம் மாவட்டம்.
பிரதிப் பொதுச்செயலாளர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி.
– என்றுள்ளது.