கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
கொரோனா தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலன்னறுவை, கல்லேல்ல கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு இன்று (31) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறையிலிருந்து கொரோனா தொற்றிய நிலையில் அடையாளங் காணப்பட்ட, 22, 23, 26, 32, 52 வயதுகளுடைய ஐவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
தற்போது பொலிஸார், இராணுவத்துடன் இணைந்து குறித்த நபர்களை கைது செய்து, சிகிச்சைக்கு அனுப்புதவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ், இவர்களை கைது செய்வதற்கான துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை, குறிப்பாக கடந்த 3 மாதத்தில் கொரோனா தொற்றி சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இவ்வாறு தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
அதற்கமைய, தற்போது தப்பிச் சென்ற ஐவருடன், இதுவரை 13 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை நிலையங்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் பெரும்பான்மையானவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் மேலதிக விபரங்களை ஊடகங்களுக்கு பின்னர் வழங்குவதாக தெரிவித்த அவர், சந்தேகத்திற்கிடமான இவ்வாறான நபர்கள் தொடர்பில் அறிவிக்க, பொலன்னறுவை தலைமையக பொலிஸ் பரிசோதகரை, பின்வரும் தொலைபேசி ஊடாக அல்லது அவசர அழைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
071- 8 91233 / 119