என்னால் மிகவும் மதிக்கப்படும் ரஜினி, மிகவும் மன உளைச்சலில் உள்ளார்.
”தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடையவர், ரஜினி. தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அரசியல் கட்சி துவங்குவதில்லை என்ற முடிவை, மிகுந்த வலியுடன் எடுத்தார்,” என, ரஜினி துவங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி என்னால் மிகவும் மதிக்கப்படும் ரஜினி, மிகவும் மன உளைச்சலில் உள்ளார். அவர், தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, மிகவும் ஆர்வமுடன் இருந்தார்.
மருத்துவர்கள் அறிவுரையால், அவரால் செயல்பட முடியவில்லை. எனவே, மிகுந்த வலியுடன், இந்த முடிவை எடுத்துள்ளார். எனக்கு ஒரு கண் மோடி; மற்றொரு கண் ரஜினி. இருவரும் இந்திய மக்களுக்கும், தமிழகத்திற்கும் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்தனர்.
அந்த ஆர்வம் காரணமாக, மாற்றத்தை ஏற்படுத்த, ரஜினியோடு இணைந்து செயல்பட்டேன். தற்போது, ரஜினி எடுத்த முடிவை, யாரும் விமர்சிக்க வேண்டாம். காலம் கனியும். இறைவன் அருள் உள்ளது.
தமிழ் மக்களோடு சேர்ந்து, அனைவரும் அவரது முடிவுக்கு, ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே, என் வேண்டுகோள். அவரோடு இருப்பது தான் என் நிலைப்பாடு. அவர், மக்கள் சேவை செய்வேன் என கூறி உள்ளார். அப்படி செய்யும்போது, அவருக்கு துணை நிற்பேன். அவருடன் பயணிப்பதே என் ஆசை.தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, ரஜினியோடு இணைந்தேன். ரஜினி மன உளைச்சலில் இருக்கிறார்.
தமிழக மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காக திட்டமிட்டார். அதை நிறைவேற்ற முடியாததால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இப்போது, அவருடன் இருக்கவே விரும்புகிறேன்.அவர் மென்மையான மனம் கொண்டவர். தன்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது என நினைப்பவர்.தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை. நிர்பந்தத்திற்கு அடிபணிய மாட்டார்.
தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தல், மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு, அர்ஜுனமூர்த்தி கூறினார்.
‘இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை, நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்’ என, காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: மாணிக்கத்திற்கும், கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில், இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும், துாய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத, அரசியல் களத்திலிருந்து, முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது.
எந்தக் கைம்மாறும் கருதாமல், சமூக நலனுக்காக, என்னுடன் கைகோர்த்து நடந்த, காந்திய மக்கள் இயக்கம் நண்பர்களின் அடிதொழுது, நான் விடைபெற்றுக் கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை, நான் அரசியலில், மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.இவ்வாறு, தமிழருவி மணியன் கூறியுள்ளார்.