நண்பர் என்ற முறையில், ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்,கமல்ஹாசன்
”நண்பர் என்ற முறையில், ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்,” என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கடியாபட்டியில் உள்ள தனியார் விடுதியில் கமல்ஹாசன் அளித்த பேட்டி:மூன்றாவது கட்ட பிரசாரம் முடிந்த பின், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, அவருடைய உடல் நலம் குறித்து விசாரிப்பேன். அந்த சந்திப்பின் போது, அவருடைய ஆதரவை கேட்பேன். எதற்காக, கட்சி துவங்கவில்லை என்ற முடிவு எடுத்தார் என்பது குறித்தும் கேட்பேன்.
உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசியல் களத்தில் இருந்து பின் வாங்கியதை, வரவேற்கிறேன். என் நண்பனின் உடல்நலம் முக்கியம். ஆன்மிகத்துக்கும், எனக்கும் விரோதம் கிடையாது. ஆனால், ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்ளும்படி, என்னை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. எதிர் சித்தாந்தம் கொண்டவர்கள் எதிரிகள் அல்ல. திராவிட கட்சிகள் மாறி மாறி ஊழல் பட்டியலை வெளியிட்டு வருவதால், எங்களுடைய பணி சுலபமாக உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு, என் தலைமையில் தான் கூட்டணி அமையும். திடீரென்று கோபப்பட்டு, நான் அரசியலுக்கு வரவில்லை. விஸ்வரூபம், ஹேராம் திரைப்படங்களை வெளியிட முடியாமல், தமிழக அரசு தடை செய்தது. அதில், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்து, நான் வெற்றி பெற்றேன். அது தான், எனக்கு முதல் வெற்றி. அப்போது, ஜெயலலிதா அரசுக்கு எதிராக குரல் கொடுத்தேன். நான், எப்போதும் அடிமையாக இருந்ததில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பவில்லை. திராவிடம் அனைவருக்கும் சொந்தமானது. இவ்வாறு, கமல் கூறினார்.