பெண்கள் நினைக்காத சிகரங்களை தொடும் முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி – ஜோ

 பேட்டி : பாகம் 1 

பெண்கள் அதிக அளவில் தடம் பதிக்காத கடற்சார் சூழலியல் துறையில் இந்திய தரச் சபையின் ஒப்புதல் பெற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர் நிபுணர், கவிதைத் தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டவர், குஜராத்தில் அன்றைய முதல்வர் மோடியுடன் பணியாற்றியவர், தமிழ்நாட்டின் ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு முனைவர் பட்ட ஆய்வுகளைத் திறனாய்வு செய்து சிபாரிசு அறிக்கை அளிக்கும் புற மாநில ஆய்வாளர் . இப்போது ஆசிய வளர்ச்சி வங்கியின் கடலோரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கடற்சார் சூழலியல் நிபுணராகப் பணியாற்றி வருகிறார் இவர். கர்நாடகக் கடலோரத்தில் மணல்மேடுகள் பாதுகாப்பு மற்றும் மீள் உருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லியிடம்  மிறர் பத்திரிக்கைகாக  உரையாடினோம்.

1. வணக்கம். உங்களை மிறர் பத்திரிக்கைகாக நேர்முகம் எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஆளுமையை கண்டு ஊக்கம் அடையும் பல பெண் உள்ளனர். முதலில்  உங்கள் பிறந்த ஊர் மற்றும் உங்கள் பின்புலம் பற்றி சொல்லுங்களேன்.

வணக்கம். நேர்முகம் எடுக்க என்னை தேர்வு செய்தமைக்கு முதலாவது உங்களுக்கு
எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடனும், ஆசிய வளர்ச்சி வங்கி திட்டங்களிலும் பணிபுரியும் சுயாதீன இயற்கை ஆர்வலர்; அப்பா ஸ்டான்லி சுபமணி, உடற்கல்வி ஆசிரியர், கன்னியாகுமரி அருகே உள்ள கரும்பாட்டூர் அவரது சொந்த ஊர், அம்மா கமலாபேபி, தமிழ் நாடு மின்சார வாரியத்தில் கணக்கு மேலாளர், முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர். அவர்களின் மூத்த மகள் நான். இளைய சகோதிரி மற்றும் சகோதரன் உண்டு. சகோதரன் கத்தார் ஏர்வெய்ஸில் பணிபுரிகிறார்.

திருமணம் தவிர்த்து, எனது விருப்ப துறைகளில் பணியேற்று, கடந்த இருபது வருடங்களாக குஜராத் மாநிலத்தின் வடோதரா நகரில் வசித்து வருகிறேன்.

வடோதரா தமிழ்ச் சங்கத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினரும், வடோதரா தமிழ் கிறிஸ்தவக் கூடுகையின் பதினெட்டு வருடத் தலைவியும் ஆவேன்.

2. ஆரம்ப கால கல்வி முதல் முதுநிலை கல்வி சூழலை பற்றி சொல்லுங்களேன்.

ஆரம்ப கல்வியை நாகர்கோயில் ஹோம் சர்ச் பள்ளியிலும், வெட்டூர்ணிமடம் ஈ டி  வில்மாட் செவன்த்டே பள்ளியிலும், பத்தாம் பத்தாம் வகுப்பு வரை நாகர்கோவில், டதி மகளிர் மேல்நிலை பள்ளியிலும், பன்னிரெண்டாம் வகுப்பு வரை தூத்துக்குடி புனித அலாய்ஸியஸ் மகளிர் மேல்நிலை பள்ளியிலும் பயின்றேன்.

இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பை தூத்துக்குடி புனித மேரி கல்லூரியிலும், முதுகலைபட்டப்படிப்பை அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், எம்.ஃபில் ஆய்வு பட்டப்படிப்பை பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரியல் ஆராய்ச்சி மற்றும் கடலியலில் கல்லூரியிலும், முனைவர் பட்டத்தை பூண்டி புஷ்பம் கல்லூரியிலும், முதுகலை முனைவர் பட்டத்தை (Post Doctorate) கடலோர பொறியியல் இணைந்த சதுப்பள காடுகள் பாதுகாப்பில் என்ற தலைப்பில், மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகத்தில் பயின்றேன். அத்துடன் சுற்றுலா மேலாண்மை, கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பட்டங்களையும், பி.எட் ஆசிரிய பட்டத்தையும்
பெற்றுள்ளேன்.

சாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகில் ஆஸ்வின் ஸ்டான்லி - சும்மா

3. தாங்கள் பணியாற்றும் துறைகள் பற்றி கூறுங்களேன்?

ஒருங்கிணைந்த கடற்சார் சூழலியல் மேலாண்மை வல்லுநரும், இந்திய தரச்சபையின் ஒப்புதல் பெற்ற சூழலியல் மற்றும் பல்லுயிர் நிபுணரும் ஆவேன்.

ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடன் இந்தியா உட்பட வடகொரியா, தென்கொரியா, மியான்மர், பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து, ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளில் ஒருங்கிணைந்த காடுகள், மீன்வளம், சதுப்பளம், விவசாயம், வேளாண்காடு வளர்ப்பு, மணல் மேடுகள், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கடலோர சூழலியல்கள் பாதுகாப்புப் புணரியக்கம், பேரிடர் மேலாண்மை, போன்ற பலதரப்பட்ட இயற்கை வள மேம்பாட்டு பிரிவுகளில் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை வல்லுநராகப் பணிபுரிந்து உள்ளேன்.

 

4. இதுவரை எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்துள்ளீர்கள்?

பதினோரு ஆசிய மற்றும் ஆறு ஐரோப்பிய நாடுகளுமாக மொத்தம் பதினேழு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

5. உங்கள் பணி சமூகத் களம் சார்ந்தே இயங்குகிறது. பல மாணவர்களை
உருவாக்கும் ஆசிரியையாக பணி செய்ய உங்களுக்கு ஆர்வம் உண்டா?.

நான் தமிழ் நாட்டின் ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு முனைவர் பட்ட ஆய்வுகட்டுரைகளை திறனாய்வு செய்து ‘ தர சிபாரிசு அறிக்கை’ அளிக்கும் புறமாநில ஆய்வாளராக இருக்கிறேன். மலாயா பல்கலைக்கழகத்தில் 2008-2009 வரை முதுகலை முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்த போது முதுகலை வகுப்பிற்கு கோஸ்டல் பயோலஜி பாடத்திட்டத்தை வகுத்தது மட்டுமின்றி கடலோர மேலாண்மை ஆசிரியராகவும் இருந்தேன்.

இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷன் அண்ட் எர்த் சயின்ஸஸ் இன் வரலாற்றில் மாணவர்கள் மதிப்பீடு செய்த கற்பித்தல் மதிப்பீடாக 6 மதிப்பெண்ணிற்கு 5.07 எடுத்தது நான் மட்டும் தான். நான் எதை செய்தாலும் மேலோட்டமாக செய்யாமல் மிக சிறப்பாக செய்யவேண்டும் என்று செயல்படுவேன். வேதபாட வகுப்பு ஆசிரியையாக 2002 ஆம் ஆண்டு முதல் வடோதரா சி.என்.ஐ புனித ஜாண் தேவாலயத்தில் இருக்கிறேன். ஆசிரியையாக ஒரே இடத்தில் இருந்து . பயணிப்பதை விட பயணமும், ஆராய்ச்சியும், தினம் புது புது கற்றலுமாக பல கலாச்சார சூழலில் பணியாற்றவே விரும்புகிறேன். ஆனாலும் நான் மிகவும் சிறந்த ஆசிரியை.

தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி

6. உங்கள் பணி இந்தியாவில் எவ்வாறாக உள்ளது?

2000 முதல் 2004 வரை குஜராத் அரசு நிறுவனங்களான குஜராத் இன்ஸ்டிடியூட் ஆப் டெஸெர்ட் எக்காலஜி மற்றும் குஜராத் எக்காலஜி கமிஷனில் பணிபுரிந்தேன்.

பின்னர் எக்கோ பாலன்ஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை தொடங்கி சுயாதீன கன்சல்டன்ட் ஆக இருக்கிறேன்.

தற்பொழுது ஆசிய வளர்ச்சி  வங்கியின் கடலோர பாதுகாப்பு திட்டத்தில் ‘கடற்சார் சூழலியல் நிபுணராக’  பணியாற்றி கர்நாடக கடலோரத்தில் மணல் மேடுகள் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்கம் செய்யும்  பணியில் ஈடுபட்டு வருக்கிறேன். கடற்கரையில் மணல் மேடுகளை பாதுகாப்பது மற்றும் புனரமைக்கும் திட்டத்தை மஹாராஸ்டிராவில் ரத்னகிரி பாட்டியே கடற்கரையில் செய்து முடித்துள்ளோம்.

இப்போது கர்நாடகா மாநிலத்தில் மணல் மேடுகள் பாதுகாப்பு மற்றும் புனரமைக்கும்
பணி நடந்து வருகிறது. கடற்கரையில் பாறாங்கற்களை அடுக்குவதற்கு பதில்இயற்கையாகவே கடற்கரையில் அமைந்துள்ள மணல் மேடுகளை அழியாமல் பாதுகாப்பதன் மூலம் கடல் அரிப்பை தடுக்கலாம். ஏற்கனவே அழிக்கப்பட்ட, அரிக்கப்பட்ட மணல் மேடுகளை புணரமைத்து வருகிறோம். புணரமைக்கும் மணல் மேடுகளை மீண்டும காற்று கலைத்துவிடாமல் இருக்க கடற்கரை பகுதியில் வளரும் கொடிவகை தாவரங்களை மணல் மீது வளர விடுகிறோம். மேற்கூறிய திட்டங்கள் இந்தியாவின் முன்னோடிகளாகும்.

7. உங்களின் சிறப்பு பணித்தளம் எது?


ஒருங்கிணைந்த கடற்சார் சூழலியல் மேலாண்மை, உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சூழலியல்கள் புணரியக்கம், பேரிடர் மேலாண்மை, போன்றவையே எனது சிறப்பு பணித்தளம்.

குறிப்பாக சதுப்பள காடுகள் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்கம், மீன் மற்றும் இறால் வளர்ப்பு போன்ற துறைகளும் எனது பெயர் சொல்லும் துறைகள். இந்தியாவின் முதலாவது ‘மாங்ரூவ் (சதுப்பள) மரங்கள் ஒருங்கிணைந்த இறால் பண்ணையை’  திரு. அலி ஹுசைன் அவர்களுடன் இணைந்து பிஸ்மி இறால் பண்ணை, பெருந்தோட்டம் என்ற பெயரில் சீர்காழியில் உருவாக்கி உள்ளோம். தற்பொழுது ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏழு மீட்டருக்கும் உயரமான ஏழு வகை மாங்ரூவ் தாவரங்கள் அங்குள்ளன. அனைவரும் கண்டு களிக்க வேண்டிய ஒரு இடம்.

8. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்துடன் இணைந்து
பணிபுரிந்த அனுபவத்தை பற்றி சொல்லுங்களேன்.

நான் முதன்முதலாக ஐ. நா வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடன் இணைந்தது 2008 ஆம் ஆண்டு, ப்ராஜெக்ட் லீட் மற்றும் டெக்னிகல் கன்சல்டன்ட் ஆக மியன்மார் நாட்டின் ரக்கைன் வுன்பைக் சதுப்பளக்காடுகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் கடலோர மக்களின் உணவு பாதுகாப்பு குறித்த திட்டத்தில் தான்.

மியான்மரில் அழகிய தடாகங்களும் நீர்நிலைகளும் சுத்தமான கடலோரங்களும்
மீன்வளங்களும் நிறைந்து காணப்படும். மிகவும் சுவையான கடல் உணவுகளும், காட்டுவிலங்குகளின் மாமிசமும், அதிகமான பன்றி மாமிசம் உண்ணும் நாடாக கண்டேன். மிகவும் இனிமையான மக்களும், புத்தமும் அதன் தாக்கமும் மிகுந்து
கொலோசும் இயற்கையும், செல்வ வளங்களை தன்னடியில் புதைத்து கொண்ட புத்த பகோடாக்கள் மிக அதிகம்.

பெண்களால் இயங்கும் கிராமங்கள் பிரதானம். “வடகொரியா தேசத்தில்” விவசாயம், காடுகள் புனரமைப்பு, வேளாண் காடு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பேரிடர் பாதுகாப்பு, போன்ற பல துறைகளில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்து, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.

கோவிட் 19 பேரிடர் காரணமாக வடகொரியா செல்ல இருந்த திட்டம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
சாதாரணமாக யாருக்கும் சுலபமாக கிட்டாத வாய்ப்பு நான் வடகொரியாவில் பணிநிமித்தம் செல்ல முடிந்தது. ஒன்பதில் ஒரே ஒரு மாகாணம் தவிர முழு தேசத்தையும் சுற்றிவரும் வாய்ப்பு கிடைத்த பாக்கியசாலி நான். மிகவும் கடினமான நிலப்பரப்பு மிகுந்த தேசம்; விவசாயத்திற்கு ஏற்ற வளமான மண் குறைந்ததும், நீர் வளமும் குறைந்த, மிகுந்த குளிர் மற்றும் பேரிடர்கள் அதிகம் தாக்கும் பூமியாகும்.

ஆனால் மக்களோ மிகுந்த மனோபலமும், உடற்பலமும் உடையவர்கள் தடைகளை
உடைத்து தினம் ஜெயித்து எழும் மக்கள். நாம் கற்று கொள்ள அதிகமான காரியங்கள் உண்டு அவர்களிடம்.

9. இவ்வளவு வேலைக்கு மத்தியிலும் நீங்கள் புத்தகம் எழுதுவதை அறிந்தோம்.
உங்கள் புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தலாமா?

அறிமுகப்படுத்திக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துடன் இணைந்து
ஆராய்ச்சிகளில் ஈடுப்பட்டு,  “மியான்மர் நாட்டின்” சதுப்பள காடுகள் குறித்த மூன்று புத்தகங்கள் – 1) சதுப்பள காட்டுமரங்கள் 2) சதுப்பள மீன்வளம் 3) சதுப்பள பாதுகாப்பு மற்றும் மேம்பாடு;  ரகைன் சதுப்பள பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் 2) ஐயியார்வதி சதுப்பள
பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் ஆகிய இரண்டு – காடுகள் மற்றும் மீன்வள மேம்பாட்டுத் திட்டங்கள்; மற்றும்  மியன்மார் தேசிய செயல்பாட்டுத் திட்டத்தின் கடல்வள மேம்பாட்டு செயல்திட்டத்தை கூட்டாக வகுத்து அளித்துள்ளேன்.

 இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்திற்காக நான்கு அத்தியாயங்களும்; ஆசிய வங்கி நிதி உதவியுடன் எழுதப்பட்ட   ‘இந்திய கடலோர பாதுகாப்பு மற்றும் மேலாண்மை சார்ந்த பருவநிலைத் தகவமைப்பு நெறிமுறைகள் ‘ மற்றும்  ‘மணல் மேடுகள் மேலாண்மை கையேடு’ என்ற புத்தகங்களின் இணையாக்கியோனும் ஆவேன்.

அலுவல் சாரா படைப்புகளாக:  ஆண் உலகம் – உடல் மனம் ஆரோக்கியம் என்ற மருத்துவ நூலை தமிழாக்கம் செய்து கிழக்கு பதிப்பகம் மூலம் 2013 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளேன்.
 சமீபத்தில் “சலியாத தீண்டல்கள்” என்ற கவிதை தொகுப்பை 2019 ஆகஸ்ட் மாதம்
வெளியிட்டுள்ளேன்.

இயற்கையின் உரசல்களும், மானுட ஸ்பரிசங்களும், உணர்வுகளின் உந்தல்களும்,
கனவுகளின் தழுவல்களும் அடங்கா கிரியா ஊக்கியாகிக் கற்பனை மிதவைகளை
அறுத்து விட்டு, ஆழ்கடல் வரை அலைந்தாடி, குளித்தெடுத்த முத்துக்களை இனஞ்சேர்த்து, ஸ்வப்னலோகத்தில் செதுக்கிய வரிகளின் அடக்கம் ஆகும் இந்த கவிதை தொகுப்பு.

தொடரும் …..

முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி
ஒருங்கிணைந்த காடுகள் மற்றும் 
எக்கோ பாலன்ஸ் கன்சல்டன்சி
வடோதரா 390 023, குஜராத்
Mobile: + 94 263 34634 ,  Email: oswinstanley@gmail.com

  • நேர்முகம் : ஜோ

Leave A Reply

Your email address will not be published.