புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக
மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும்
பொலிஸார், சுகாதாரப் பிரிவினர் கூட்டாக வேண்டுகோள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் புதுவருடத்தை வரவேற்கத் தயாராகின்ற நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் வைபவங்கள் மற்றும் களியாட்டங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் விபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் சுகாதாரப் பிரிவு மற்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
பட்டாசு கொளுத்துதல், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துதல், நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்கள் போன்றன அதிகரிக்கலாம் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்தோடு, பண்டிகைக் காலத்தில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் சிறுவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, பொதுப் போக்குவரத்துச் சேவையைக் கண்காணிப்பதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்