தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கியுள்ளது
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை தொடங்கியுள்ளது. ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகை ஒரே நாளில் நிறைவுபெறும் என்றும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் அதனை செலுத்துவற்கான வழிமுறைகளை திருத்தி அமைப்பதற்கு இந்த ஒத்திகை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் தடுப்பூசி ஒத்திகை மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”இந்த ஒத்திகையில் முதல் கட்டமாக 25 நபர்களுக்கு ஊசி போடுவதற்கான நடைமுறை சோதனை செய்யப்படும். உண்மையான ஊசி எதுவும் இன்று செலுத்தப்படமாட்டாது. 25 நபர்களுக்கு ஊசி செலுத்துவதற்கு என்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் என்ன வசதிகள் தேவை என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த ஒத்திகை பயன்படும், என்றார்.
ஒத்திகை நடைமுறையின் போது சந்தித்த சவால்கள் பற்றிய விளக்கத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி வரும் பட்சத்தில் தமிழகத்தில் சுமார் 2.5 கோடி தடுப்பூசிகளை
சேமித்துவைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், ”தடுப்பூசி செலுத்தும் மையங்களில் சேமிப்பு அறை எப்படி இருக்கவேண்டும், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கலந்துகொண்டவர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது, சுகாதார பணியாளர்களுடன் மற்ற துறையினரின் பங்கு எப்படி இருக்கவேண்டும் என்ற படிப்பினையை இந்த ஒத்திகை தரும். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன், முதலில் சுகாதார பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சோதனை மையத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும்,” என்றார்.
”இரண்டாம் கட்டமாக, முன்கள பணியாளர்கள் அதாவது தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பொது மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும். அடுத்ததாக, இணை நோய்கள் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய அரசு வழங்கியுள்ள வழிமுறைப்படி தடுப்பூசி அளிக்கப்படும்,” என்றார் அவர்.