கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிலைபாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியும் என இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞான ரீதியான தகவல்களை அடிப்படையாக கொண்டு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வின் ஊடாக சடலங்களை அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, வைத்திய அதிகாரிகள் சங்கம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் குறித்து அவசர ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.
அதனடிப்படையில் கொவிட் சடலங்கள் குறித்து இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில்,
1.கொரோனா தொற்று சுவாசக் குழாய் வழியாக மட்டுமே ஏற்படுவதாகவும், குறித்த வைரஸ் உயிரணுக்களில் மட்டுமே பரவும்.
2.வைரஸ் ஒரு உயிருள்ள கலத்தில் மட்டுமே வளர முடியும் என்பதால், உயிரற்ற உடலில் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழ முடியாது.
3.பிரேத பரிசோதனையில் பி.சி.ஆர் முடிவுகள் நேர்மறையானவை என்றாலும், சடலங்களில் இருந்து வைரஸ் பரவுகிறது என்பதை திட்டவட்டமாகக் கூட முடியாது.
4.அடக்கம் செய்யப்படும் பூதவுடல்களினால் ஏற்படும் நீர் மாசுபாட்டை விட தொற்றாளர் ஒருவரினால் வௌியேற்றப்படும் கழிவுகளினால் நீர் கடுமையாக மாசுபடக்கூடும்.
5.நிலத்தடி நீரில் வைரஸ் துகள்கள் பல சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ள போதும், குறித்த வைரஸினால் நோய்த்தொற்றுகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கு முன்னர் பதிவான இன்புளுவென்சா மற்றும் சார்ஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளில் கூட அவ்வாறான தொற்று நோய்கள் குறித்து எதுவும் பதிவாகவில்லை.
6. டென்மார்க்கில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட கீரிகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டமைக்கான காரணம் நீர் மாசடைவதன் காரணமாக இல்லை எனவும் உக்கும் கீரிகளின் உடல்களில் இருந்து நைட்ரைஜன் கழிவுகள் சூழலில் மற்றும் நீருடன் கலப்பதனாலாகும்.
7.நீரினால் பரவும் கொலரா போன்ற கொடிய நோய்களில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கூட அடக்கம் செய்யப்படுகின்றன.