மாநகரையே ஆள முடியாத கூட்டமைப்பினர் மாகாண சபையைக் கோருவது வெட்கக்கேடு : போட்டுத் தாக்குகின்றார் அமைச்சர் சரத் வீரசேகர
“மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது.”
– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“புதிய அரசமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோரி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மாகாண சபை முறைமையிலான அதிகாரப் பகிர்வையும் வேண்டி நிற்கின்றனர். இவை இரண்டும் அறவே வேண்டாம் என்பதே எனது நிலைப்பாடு.
மாநகர சபையில் ஆட்சி நடத்தத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது. வடக்கில் ஒரேயொரு மாநகர சபை யாழ்ப்பாணம் மாநகர சபையே. அந்தச் சபையைக் கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் முட்டிமோதி மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் அதை இழந்துள்ளனர். ஒரு மாநகர சபையில்கூட ஒற்றுமையாக ஆட்சி நடத்தக்கூடிய பக்குவம் கூட்டமைப்பினரிடம் இல்லை.
இதேவேளை, கடந்த வடக்கு மாகாண சபை ஆட்சியிலும் அந்தச் சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சீரழித்தனர். அதன் ஆட்சி அதிகாரம் கூட்டமைப்பினரிடம் இருந்தபோதிலும் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை. ஒரு பக்கம் உப்புச்சப்பற்ற தீர்மானங்கள் நிறைவேற – மறுபக்கம் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடின. இதுதான் கூட்டமைப்பு ஆட்சியின் விசித்திரம்.
‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ என்ற கொள்கையுடன் ஜனாதிபதி செயற்படுகின்றார் எனில், புதிய அரசமைப்பில் மாகாண சபை முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில்தான் இருக்க வேண்டும். அதை ஒன்பது மாகாணங்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் மத்தியில் ஆட்சி எதற்கு?” என்றும் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.