2024இல் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சஜித் – சம்பிக்க இடையே போட்டியா? மறுக்கின்றது ஐக்கிய மக்கள் சக்தி
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்தத் தகவலை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அரசியல் எதிரிகளே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, முரண்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.
சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் எந்தவொரு போட்டியும் இல்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு என்பது ஜனநாயக அம்சம் கொண்டது. தலைவர் பதவிக்கு வருவதற்கு எவருக்கும் தடை இல்லை.
எனினும், பதுளையில் நடைபெற்ற சம்மேளனத்தின்போது சஜித்தைத் தலைவராக நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் தலைமையில் முன்னோக்கிப் பயணிப்போம்” – என்றார்.