கொக்கிளாயில் அதிகரித்துள்ள புல்மோட்டை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி.
கொக்கிளாய் கடல்நீரேரியில் அதிகரித்துள்ள புல்மோட்டை மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
முல்லைத்தீவு கொக்கிளாய் கடல்நீரேரிக்கு புல்மோட்டை மற்றும் அதற்கு அப்பாலுள்ள மீனவர்கள் வருகைதந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் கடல் நீரேரியின் வளம் பாதிக்கப்டுவதுடன் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
எனவே இப்பிரச்சினைக்கு உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொக்கிளாய் கடல்நீரேரியில் புல்மோட்டை மற்றும் அதற்கு அப்பாலுள்ள மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் 03.01.2021 இன்றைய நாள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் நேரில்சென்று ஆராய்ந்திருந்தனர்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்கிளாய் கடல் நீரேரி என்பதுமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களுடைய பாரியதொரு சொத்தாகும்.
கொக்கிளாய் கடல் நீரேரியினுடைய வளங்கள் அனைத்தையும் முல்லைத்தீவுமாவட்டத்தைச் சேர்ந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மீனவமக்கள் சீரான முறையில் பயன் படுத்திவந்தார்கள்.
இதனைவிட வீச்சுக் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிற இடங்களில் இருந்தும் இறால் வீச்சுத்தொழில் செய்வதற்காக மீனவமக்கள் கொக்கிளாய் கடல்நீரேரிக்கு வருவார்கள்.
தற்போது திருகோணமலைமாவட்டத்தினைச் சேர்ந்த, புல்மோட்டை மீனவர்களும், அதற்கு அப்பாலுள்ள மீனவர்களும் குறித்த கொக்கிளாய் கடல் நீரேரிக்கு வருகைதந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளின் மூலம், நீரேரியினுடைய வளத்தினை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதனூடாக, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினையும் கேள்விக்குறியாக்குகின்றனர்.
குறிப்பாக புல்மோட்டையிலுள்ள மீனவர்களும், அதற்கு அப்பாலுள்ள மீனவர்களும் 25குதிரைவலு மற்றும் 40குதிரைவலுகொண்ட இயந்திரப்படகுகளில் கொக்கிளாய் கடல் நீரேரிக்குவருகைதந்து சட்டவிரோத தொழில்களை அப்பட்டமாகச் செய்துவருகின்றனர்.
இதேவேளை கடந்த 1981.06.12 வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும், 1996.11.07 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியிலும் கடல் நீரேரியில் தடைசெய்யப்பட்டுள்ள தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக கடற்றொழில் நீரியல் வள பணிப்பாளர் நாயத்தினால் 2014.01.30ஆம் திகதியிடப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும் கொக்கிளாய் கடல் நீரேரியில் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கை தொடர்பிலும், குறித்த தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டியது யார்? கடலிலும், நீரேரிகளிலும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை செய்வதை முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களம்தான் தடுக்கவேண்டும்.
எனினும் மீனவர்கள் உரிய அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக இப் பிரச்சினை தொடர்பில் முறையிட்டபோதும் பலன் ஏதும் கிடைக்காத நிலையில் ஊடகவியலாளர்களிடமும், என்னிடமும் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
அதற்கமைய கடல் நீரேரிக்குள் நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தோம்.
அப்போது அங்கே கூட்டுவலைகளைப் பயன்படுத்தி மீன்குஞ்சுகளையும், இறால் குஞ்சுகளையும் அழிக்கின்றனர்.
இந்த அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன்?
முல்லைத்தீவில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் பெயரளவில்தான் இருக்கின்றதா?
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு காவல்துறை மற்றும் கடற்படையினருக்கு உத்தரவிடுவதன் மூலம் குறுகிய நாட்களுக்குள்ளேயே இந்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால் அந்த வேலையினை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் செய்வதில்லை. தனியாக தமது அலுவலகத்தில் மாத்திரமிருந்து தாங்கள் தமது ஊதியத்தினைப் பெற்றுக்கொண்டுசெல்லும் செயற்பாட்டையே செய்துகொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிமக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைதொடர்பில் கருநாட்டுக்கேணி பகுதி மீனவர்களே எம்மிடம் தெரியப்படுத்தி கடல் நீரேரிக்கும் அழைத்துச்சென்றிருந்தனர்.
அந்தவகையில் அப்பகுதிமக்கள் தாம் சட்டவிரோத தொழில்களால் எதிர்நோக்கும் வாழ்வாதார நெருக்கடிகளை எம்மிடம் சொல்லி கதறி அழுகின்றனர்.
எனவே இப் பிரச்சினைக்கு உரியவர்கள் நிரந்தரமானதொரு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதுடன், எமது மீனவர்களை வாழ்வாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுங்கள் – என்றார்.