கொரோனா காவு கொண்ட அப்துல் ஜப்பார் எனும் ஆளுமை : சுவிசிலிருந்து சண் தவராஜா
தமிழ்கூறும் நல்லுலகெங்கும் நன்கு அறியப்பட்ட ஊடகர், ஒலிபரப்பாளர், கலைஞர், எழுத்தாளர் அப்துல் ஜப்பார் டிசம்பர் 22 ஆம் திகதி தனது 81 ஆவது வயதில் இந்த உலகை விட்டு மறைந்தார். கொரோனாக் கொள்ளை நோய் காவு கொண்ட இலட்சக் கணக்கான உயிர்களுள் அவரும் ஒருவரானார். மாரடைப்பு காரணமாக அவர் இறப்பைத் தழுவியிருந்தாலும், அவரது இறப்பைத் துரிதப்படுத்தியது கொரோனத் தீநுண்மியே என்பது முற்றிலும் உண்மை.
உயிர்கள் யாவையும் என்றோ ஒருநாள் இறப்பது இயற்கையே ஆயினும், எமக்கு நெருக்கமானவர்கள் மறையும் போது கவலை மனதை அரிப்பதைத் தடுக்க முடிவதில்லை. மரியாதை நிமித்தம் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், உற்றுக் கவனித்தால் கண்களே கவலையைக் காட்டிக் கொடுத்துவிடும். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என அறியப்பட்ட அவரை அண்மைக் காலமாகத் தொடர்ந்து அவதானித்தவர்களுக்கு அவர் மரணத்தின் வாயிலில் இருக்கிறார் என்பது ஓரளவு புரிந்திருக்கும். ஆற்றொழுக்கான அவரது தமிழ் அடிக்கடி ‘தடங்கலுக்கு’ உள்ளாகியதை அண்மையில் அவர் வானொலிக்கு வழங்கிய செவ்விகள் மூலம் அவதானிக்க முடிந்தது. அது மாத்திரமன்றி அவரது கம்பீரமான குரலும் பிசிறத் தொடங்கியிருந்தது.
இந்தியாவில் பிறந்து, இலங்கையில் வளர்ந்து, கல்வி கற்று, மீண்டும் தாய்நாட்டில் வசித்து மறைந்த அவரது வாழ்வு ஊடகத் துறையில் பிரவேசிக்க, பிரகாசிக்க நினைப்பவர்களுக்கு பல முன்னுதாரணங்களைத் தர வல்லது. தமிழில் மாத்திரமன்றி ஆங்கிலத்திலும் அவர் கொண்டிருந்த புலமை அவரை ஒரு அறிஞராக மட்டுமன்றி கிரிக்கட் விளையாட்டின் வர்ணனையாளராகவும் மிளரச் செய்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஒரு வானொலி நாடகக் கலைஞராக நுழைந்த அவர், படிப்படியாக முன்னேறி தமிழ் கூறும் நல்லுலகின் முதல்தர கிரிக்கட் வர்ணனையாளராக உயர்ந்தார். அது மாத்திரமன்றி, தனது புதிய தொழிலின் மூலம் நட்சத்திர செல்வாக்கைப் பெற்றதுடன், சிறந்த வருமானத்தையும் ஈட்டிக் கொண்டார்.
அப்துல் ஜப்பார் அவர்களை முதன் முதலில் நான் சந்தித்தது 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி. சந்தித்தது என்பதை விடவும் கண்டது என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஊடகர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஊடகர் சந்திப்பில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றிருந்தோம். 10 ஆம் திகதி காலையில் ஊடகர் சந்திப்பு என அறிவிக்கப் பட்டிருந்ததால் முதல் நாளே கிளிநொச்சி சென்றிருந்தோம். வட்டக்கச்சி விவசாயப் பண்ணையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு நாங்கள் தங்குமிடத்தைச் சென்றடைந்த போதில் வெள்ளைச் சாரம் கட்டியபடி படுக்கையில் அமர்ந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு பெரியவரைப் பார்க்க முடிந்தது. இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த ஊடகர்களுள் மிகவும் வித்தியாசமான ஒருவராக அவர் இருந்தார். ஐ.பி.சி. வானொலி மற்றும் தீபம் தொலைக் காட்சி என்பவற்றில் பணியாற்றும் அப்துல் ஜப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. எனது நினைவு சரியானால், அந்த ஊடகர் சந்திப்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஒரேயொரு முஸ்லிம் ஊடகர் அவராகத்தான் இருக்கும்.
மறு நாள் ஊடகர் சந்திப்பு நடந்து முடியும்வரை அவரைப் பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை. ஆனால், ஊடகர் சந்திப்பு முடிந்த பின்னர் அவரைப் பற்றிப் பேச வேண்டி நேர்ந்தது. அவசர அவசரமாக அவர் போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தனியே சந்திப்பதற்காக. அவர் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவரா என எம்முள் பேசிக் கொண்டோம். ‘அழைத்தார் பிரபாகரன்’ என்ற தலைப்பில் அந்தச் சம்பவத்தை விபரித்து அவர் பிற்காலத்தில் ஒரு நூலையும் எழுதியிருந்தார்.
மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு 2007 ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்தில் ஏற்பட்டது. சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஜெனீவா நகரில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ~வெல்க தமிழ்| நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொள்ள தமிழீழ தேசிய ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறனோடு வருகை தந்திருந்தார் அப்துல் ஜப்பார். ஜ.நா. முன்றலில் குழுமியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர் மத்தியில் அப்துல் ஜப்பாரின் தேமதுரத் தமிழை நேரில் கேட்கும் வாய்ப்பு அப்போது கிட்டியது. தொடர்ந்து ஒருசில நாட்கள் அவரோடு பேசிப் பழகும் பாக்கியமும் கிட்டியது. அன்றைய அரசியல் சூழல், தமிழக நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக அவரோடு விரிவாக உரiயாட முடிந்தது. அப்போது நான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலவரம் பத்திரிகைக்காக அவரிடம் இருந்து ஒரு செவ்வியையும் பெற்றுக் கொண்டேன்.
ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஊடாக எங்கள் நட்பு தொடர்ந்தது. நான் எழுதிய கட்டுரைகளை அவருக்கு அனுப்பி வைத்தேன். தனது ஒலிப்பதிவுகளை அவர் எனக்குக் கிரமமாக அனுப்பி வைத்தார்.
‘உண்மைகள் பிடிவாதமானவை’ என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பு நூலுக்கான அணிந்துரையைப் பெற்றுக் கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை எழுதி வழங்கினார்.
2019 ஏப்ரலில் எனது நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது நேரில் வந்து கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அன்புப் பரிசாக அவரது மொழி பெயர்ப்பில் உருவான ‘இறைத் தூதர் முஹம்மத்’ என்ற நூலை மேடையில் வைத்தே பரிசளித்தார். அது மட்டுமன்றி, தனது வீட்டுக்கும் அழைத்து உபசரித்தார்.
அவரது அனுபவத்தோடும் ஆற்றலோடும் ஒப்பிடுகையில் எம் போன்றோர் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனாலும், ஒரு சகோதரனுக்குரிய வாஞ்ஞையுடன் அவர் நடந்து கொண்டார். தொடர்ந்து வந்த காலங்களில் தொடர்புகள் அற்றுப் போன சூழ்நிலையில் உரிமையோடு கடிந்து கொண்டார். தனது குரல் பதிவுகளைத் தொடர்ந்தும் அனுப்புவதற்குத் தவறியதில்லை.
‘லிபர்ட்டி தமிழ்’ வலைக் காட்சியில் ஊடகர் ஜீவசகாப்தனுக்கு நவம்பர் மாதம் அவர் வழங்கிய செவ்வியைப் பார்த்ததும் நான் கலங்கியே போய் விட்டேன். எத்தகைய கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரன். ஆற்றொழுக்கான தமிழுக்குச் சொந்தக்காரன். இவ்வாறு தயங்கித் தயங்கி, தடுமாறித் தடுமாறி, சொற்களை மறந்து, சம்பவங்களை மறந்து, கோர்வையின்றிப் பேசுவதைப் பார்த்தபோது அவர் நம்மை விட்டுப் பிரியும் காலம் நெருங்கி விட்டது என்பதை உணர முடிந்தது. நான் மாத்திரம் அல்ல ஊடக நண்பர்கள் பலரும் உணர்ந்திருப்பார்கள் போலத் தெரிந்தது. இல்லாவிடில், அந்தக் காலகட்டத்தில் அவர் பங்கு பற்றிய பல செவ்விகள் வந்திருக்காது.
அவரது மரணச் செய்தி காதில் எட்டிய போது – ஏற்கனவே எதிர்பார்த்த ஒரு செய்தியைப் போன்று தோன்றினாலும் – மனதில் மிகப் பெரிய துயரம்; தோன்றவே செய்தது. இனி ஐ.பி.சி. தமிழ் வானொலியில் அவரது குரலைக் கேட்க முடியாது. கனடாவில் கீதவாணி, அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் வானொலி போன்றவற்றில் அவரது இந்தியக் கண்ணோட்டம் இனி ஒலிக்காது.
அவரது மரணச் செய்தி வெளியாகியவுடன் தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் பல ஊடகங்களில் அவருக்கான அஞ்சலிக் கட்டுரைகள், செய்திகள், காணொளிகள் வெளியாகியிருந்தன. அவரது படைப்புக்களான ‘அழைத்தார் பிரபாகரன்’ மற்றும் அவரது சுயசரிதை நூலான ‘காற்று வெளியினிலே’ போன்றவை பற்றியும் சிலாகித்துப் பேசப்பட்டன. இறுதிக் காலகட்டத்தில் கூட தனது முழுமையான சுயசரிதை ஒன்றைக் கொண்டு வருவதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதனை அவர் முழுமையாக எழுதி முடித்து விட்டாரா? அவர் நினைவாக அந்த நூல் அவரது வாரிசுகளால் வெளியிடப் படுமா என்பவை தொடர்பில் தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
அவரது சுயசரிதை நூல் வெளியிடப்பட வேண்டும் என்பதே அவரின் அபிமானிகளான என்னைப் போன்றவர்களின் வேண்டுகோள். அவரது மூத்த இளவலும், மத்திய கிழக்கில் தொழில் புரிந்து கொண்டே ஊடகப் பணியிலும் ஈடுபட்டு வருபவருமான ஆசிஃப் மீரான் இது விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன்.
அப்துல் ஜப்பாருக்கு மிகவும் பிடித்த விடயங்களுள் ஒன்று மற்றவர்களுடன் பேசுவது. அதிலும் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றிப் பேசுவது என்றால் அலாதி விருப்பம் அவருக்கு. மணிக் கணக்கில் பேசுவதானாலும் அவருக்குச் சம்மதமே. அவரிடம் காரணம் கேட்க நினைத்து கேட்காமல் போன விடயங்களுள் அதுவும் ஒன்று. ஆனால், இன்று நினைக்கும் போது பிரபாகரன் மீதான அளவு கடந்த அபிமானத்திற்குக் காரணம் 1958 இல் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முதலாவது இனவெறித் தாக்குதலாக இருக்கக் கூடும் என நினைக்கிறேன். அன்றைய வேளையில் அவர் கொழும்பில் மருதானையில் தங்கியிருந்தார். அப்போது, அந்த இனவெறித் தாக்குதலின் சாட்சியாக அவரும் விளங்கினார்.
ஈழப் பிரச்சனை தொடர்பாகத் தமிழ் நாட்டில் பேசும் பலரும் இலங்கையில் வாழ்நாளில் காலடி எடுத்து வைத்திராதவர்களே. அல்லது ஓரிரு நாட்கள் வந்துவிட்டுப் போனவர்களே. ஆனால், அப்துல் ஜப்பார் அத்தகைய ஒருவர் அல்ல. அவர் இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்தவர். கொழும்பு சாஹிரா கல்லூரியில் கல்வி கற்றவர். தமிழர்கள் தாக்கப்பட்ட போதில் கண்ணால் பார்த்தவர். எனவே, இலங்கையின் இன முரண்பாடு பற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருக்கவில்லை.
ஒரு வகையில் சொல்வதானால் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு இலங்கை இன முரண்பாட்டைப் புரியச் செய்வதில் அவர் ஒரு பாலமாகச் செயற்பட்டார். அவரின் மறைவோடு அந்த இழை அறுந்து விட்டது. தற்போதைய நிலையில் இலங்கையின் இன முரண்பாடு பற்றி அளவுக்கு அதிகமான புரிதல் தமிழ் நாட்டில் ஏற்பட்டு விட்டது. ஆனால், அப்துல் ஜப்பார் ஊடகராகப் பணியாற்றத் தொடங்கிய காலகட்டத்தில் அவரைப் போன்றோரின் தேவை அளவிட முடியாததாக இருந்தது.
தனது செய்தி ஒலி, ஒளிப் பதிவுகளை நிறைவு செய்யும் போது அவர் செப்புகின்ற வாசகம் “யாமறியோம் பராபரனே”. அந்த வாசகம் மீண்டும் வானலைகளில் தவழ்ந்து வராதா என ஏங்குகின்றது மனம், அவ்வாறு நிகழாது எனத் தெரிந்து கொண்டும். புத்தக அடுக்கில் இருந்த அவர் அன்பளிப்புச் செய்த ‘இறைத் தூதர் முஹம்மத்’ நூலை எடுத்துத் தடவிக் கொள்கிறேன்.