புதிய அரசமைப்பு வரைபை இவ்வருடம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு திட்டம்.
புதிய அரசமைப்பு வரைபை இவ்வருடம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அரசு திட்டம்.
புதிய அரசமைப்பு தொடர்பான சட்ட வரைபை இந்த வருடம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசு நிபுணர்கள் குழுவொன்றை அமைத்திருந்தது. மேற்படி குழு பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத் தபால் மூலம் கருத்துக்களைக் கோரியிருந்தது. பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர்.
இந்தக் குழுவின் யோசனைகள் அடங்கிய வரைவு நகல் எதிர்வரும் மார்ச்சில் அரசிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் புதிய அரசமைப்பை இயற்றுவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை அனுமதி உட்பட சட்டபூர்வமான ஏற்பாடுகள் பூர்த்தியான பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வரும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்த வருடத்துக்குள் புதிய அரசமைப்பு இயற்றப்படும் எனவும் அறியமுடிகின்றது.
சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாத வகையில் புதிய அரசமைப்பை இயற்றுவதே அரசின் திட்டமாக இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.