மழையைப் பயன்படுத்தி பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கடத்தல்.

மட்டக்களப்பு நகரில் கொட்டும் மழையைப் பயன்படுத்தி சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திய இருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன் படுத்திய இரு முச்சக்கர வண்டியையும் ஒருவரிடமிருந்து 19கிராம் மற்றும் 20மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் மற்றவரிடமிருந்து 2கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (03) இரவு 10 மணியளவில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் தாம் செலுத்திவந்த முச்சக்கரவண்டிகளைத் பொலிஸாரைக் கண்டு திருப்பிக் கொண்டு செல்ல முற்படுகையில் சந்தேகமடைந்த பொலிஸார் முச்சக்கர வண்டிகளை சோதனையிட்டபோது இப்போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினூடாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சதாசிவம் நிரோசன்