காத்தான்குடி பிரதேசத்தில் பல பகுதிகள் தொடர்ந்தும் முடக்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதிகள் தொடர்ந்தும் எதிர்வரும் 15 ம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்படும் என மாவட்ட செயலகத்தில் இன்று(04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 30 ம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 59 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் இதனை தொடர்ந்து அவசரமாக மாவட்ட கொரோனா செயலணியைக் கூட்டி அந்த பகுதி 5ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் செயலாளரால் 25 மாவட்ட கொரோனா செயலணிக்காக 25 இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேஜர் ஜெனரல் ரணசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலணிக் குழுவை கூட்டி அதில் கலந்துகொண்டார். இதில் காத்தான்குடி நிலமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது இதன்படி காத்தான்குடியில் தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற அன்டிஜன் பரிசோதனையில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் 5 தினங்கள் முடக்கப்பட்ட அந்த பகுதி மேலும் 11 தினங்களுக்கு நீடிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
எனவே எதிர்வரும் 15 ம் திகதிவரை காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
சதாசிவம் நிரோசன்