இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 302 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 302 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 157 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து இருந்தது. டீன் எல்கர் 92 ரன்னுடனும், வான்டெர் துஸ்சென் 40 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 133 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 13-வது சதம் இதுவாகும். அணியின் ஸ்கோர் 218 ரன்னாக உயர்ந்த போது டீன் எல்கர் (127 ரன்கள்) ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரிலேயே வான்டெர் துஸ்சென் (67 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்து நடையை கட்டினர். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 75.4 ஓவர்களில் 302 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. லுங்கி நிகிடி 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ, தசுன் ஷனகா தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. கேப் டன் கருணாரத்னே 91 ரன்னுடனும், நிரோஷன் டிக்வெல்லா 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.