அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க; பிணையாளர்களாகத் தமிழ் எம்.பிக்கள் தயார்!
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க; பிணையாளர்களாகத் தமிழ் எம்.பிக்கள் தயார்!
சபையில் அரசிடம் சார்ள்ஸ் எம்.பி. எடுத்துரைப்பு
“கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அவர்கள் அனைவரையும் உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணையாளர்களாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் தயாராக உள்ளோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களில் சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் இடம்பெற்றது உரிமைப் போர். அதில் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று கொரோனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளனர். எனவே, அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் நிமிர்த்தம் அவர்கள் அனைவரையும் உடனடியாக அரசு விடுதலை செய்யவேண்டும் அல்லது அவர்களைப் பிணையிலாவது விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பிணை வைப்பதற்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் தயாராக உள்ளோம் என்பதையும் ஜனாதிபதியிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதனை சபையில் மக்கள் சார்பில் முன்வைக்க விரும்புகின்றேன்.
இந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு அதனால் இத்தனை தாக்கங்கள் ஏற்பட முழுமையான காரணம் ஜனாதிபதியே. அவரே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒரு சிறிய தீவுக்குள் – குறுகிய மக்கள் தொகை வாழும் இந்த நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாதமைக்குப் பிரதான காரணம் பொறுப்புக்களை சுகாதாரத்துறையிடம் இருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்கியமையேயாகும். இதுதான் நாடு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளது.
அரச தரப்பினர் இராணுவத்தை வைத்து நாட்டு மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.தேர்தல் வெற்றியை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு அரசு தீர்மானம் எடுக்கின்றது. அப்போது இருந்த நிலையில் இன்று இந்த நாட்டு மக்களின் மனநிலை இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.