இலங்கை தமிழர் உரிமைகளை உறுதிப்படுத்த மீண்டும் வலியுறுத்திய இந்தியா
இலங்கை தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வு அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை அமல்படுத்தும் கடப்பாட்டை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
இலங்கையின் நீண்டகால நல்லிணக்க செயற்பாடுகளையும், இனங்களுக்கு இடையிலான அமைதியையும் நிலைநாட்டி, அனைத்து மக்களையும் உள்வாங்கிய அரசியல் கொள்கையொன்றை உருவாக்க இந்தியா ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஒருமித்த நாட்டிற்குள் தமிழர்களின் அபிலாஷைகளான நீதி, அமைதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்துவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பரஸ்பர நம்பிக்கை, கௌரவம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டு செயற்படும் என அவர் கூறினார்.
கொரோனா பரவல் தாக்கத்துக்குப் பிறகு, இந்தியாவின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருவதாக கூறிய அவர், அதனூடாக இலங்கைக்கு நேர்மறையான நன்மைகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள், இலங்கையில் முதலீடு செய்து குறித்து, ஆர்வம் காட்டி வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாடுகளும் ஒரே விதமான சவால்களையே எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த பரஸ்பர ஒத்துழைப்புடன் ஒருமித்து செயலாற்றக்கூடிய வாய்ப்பை அது ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதன்கிழமை முற்பகலில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் – 19 தடுப்பூசியை சர்வதேச நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது உறுதியளித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் – 19 தொற்றுக்கான தடுப்பூசியின் சிகிச்சை தரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், அதனை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையிலான மேலும் பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், திரவியங்கள், காற்றலை மின்னுற்பத்தி திட்டம், வீடமைப்பு, வீதி புனரமைப்பு, விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு, தொடர்பாடல், தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் கல்வி அறிவை பெற்ற இளம் தலைமுறையினர் உள்ளதாக கூறிய ஜனாதிபதி, அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான பயிற்சிகளை வழங்க இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையர்களுக்கு தேவையான உரிய தொழில் பயிற்சிகளை வழங்க தமது நாடு தயாராகவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கோவிட் தொற்றினால் வீழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை, இந்தியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடல்களை நடத்த இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.