நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை மேற்கொண்டு தாய்நாட்டுக்கு திரும்பியிருந்த 513 பேர் மீண்டும் தமது தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்றைய தினம் நாடு திரும்பியவர்களுள் துபாயில் இருந்து 144 பேரும் டோகாவில் இருந்து 57 பேரும் மாலைதீவில் இருந்து 42 பேரும் உள்ளடங்குவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர்கள் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை இந்தியா, பங்களாதேஷ், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகை இலங்கையர்கள் இன்றைய தினம் அதிகாலை நாடு திரும்பவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.