கொரோனாவால் இதுவரையில் 219 பேர் உயிரிழப்பு.46 ஆயிரத்து 248 பேருக்கு தொற்று.
இலங்கையில் கொரோனாவால் இதுவரையில் 219 பேர் உயிரிழப்பு – 46 ஆயிரத்து 248 பேருக்கு தொற்று
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
தெஹிவளையைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக பாதிப்பு மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, அலவ்வ பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோயாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர், நாரம்மல மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொற்று காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 522 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 39 ஆயிரத்து 23 பேர் இதுவரை குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 6 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.