வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
வவுனியாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முடக்கப்பட்ட நகரின் முக்கிய பகுதிகள்
வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.
இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன், ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 55 பேரையும், கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், வவுனியா நகரின் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட 55 பேருடனும் தொடர்பில் உள்ளவர்களின் விபரங்களை சுகாதார துறையினர் திரட்டி வருகின்றனர்.