11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு – தமிழ்த் தேசியத் தரப்பு கூட்டாக அறிவிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கு தழுவிய முழு கதவடைப்புக்குத் தமிழ்த் தேசியத் தரப்பு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக குறித்த அழைப்பை விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.
இதன்போது அங்கு சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைக்கு நீதி கோரி எதிர்வரும் 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியிலான ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அனைத்துத் தரப்பினரும் குறித்த கலந்துரையாடலில் இருந்தமையால் உடனடியாகவே மாணவர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு ஊடகச் சந்திப்பில் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் மாணவப் பிரிநிதிகளும் கூட்டாக கோரிக்கைவிடுத்தனர்.
அதன் அடிப்படையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு தழுவியதாக பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு வர்த்தக சங்கத்தினர், பஸ் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.