முன்னைய பாதுகாப்பு செயலர் போல செயல்பட வேண்டுமா? : கோட்டாபய ராஜபக்ச
மக்கள் முந்தைய ஆட்சிகளிலிருந்து வித்தியாசமான ஒரு ஆட்சியாளராக நான் இருப்பேன் என்று மக்கள் எதிர்பார்த்ததாகவும், சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பௌத்த பிக்குகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் இருப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை உஹனவில் மக்களை சந்தித்த வேளையில் தெரிவித்துள்ளார்.
“எப்பொழுதும் இருந்ததை விட வித்தியாசமான ஆட்சியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். பௌத்த பிக்குமார் கூட அப்போது இருந்ததை விட வேறுபட்ட ஆட்சியொன்றை எதிர்பார்ப்பதால்தான் அரசியல் பழிவாங்கல்களை செய்யவில்லை. தேவையற்ற அரசியல் அழுத்தங்களை பிரயோகித்து செயல்பட நான் தயாராக இல்லை.
ஆனால் அவ்வாறு செய்யும்போது கூட, துரதிர்ஷ்டவசமாக இப்போதுள்ள எதிர்க்கட்சிக்கும் அது புரியவில்லை. அண்மையில் நாடாளுமன்றத்தில் அப்படியான ஒரு நிகழ்வை நான் கண்டேன். ஹரின் பெர்னாண்டோ என்ற பெயரில் ஒரு எம்.பி. பேசிய விதம் போல நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
என்னை நந்தசேன என அழைத்தார்… ஆம், நான் நந்தசேன கோட்டாபயதான். அவர்கள் நல்லவர்களாக இருந்தால் நானும் அப்படித்தான். ஆனால் நந்தசேன கோதபயவுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. இப்போது கூட சில சமயங்களில் பெளத்த துறவிகள் என்னிடம், “எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய தேவையில்லை, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயாவைத்தான் நாங்கள் பார்க்க விரும்புகிறோம், நீங்கள் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். அதையும் செய்ய முடியும்.
எனவே நீங்கள் அந்த மாதிரி வந்தால், அந்த மாதிரி என்னால் அதைச் செய்ய முடியும். நான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது, பிரபாகரன் ஒரு குண்டை என் மீது வீசி என்னை அழிக்கும் வேலையை செய்யத் நினைத்தார். பின்னர் அவரை முடித்துவிட்டு இறுதியாக ஒரு நாயைப் போல நந்திக்கடலில் இருந்து தூக்கிக் கொண்டு வந்தோம். அந்த நிலைக்கும் நீங்கள் என்னைக் கொண்டு வர முடியும். எனவே எதற்கும் தயாராக இருக்கும் ஒருவன் நான். ஆனால் நான் மக்களுக்காக உழைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.
இன்று (09) அம்பாறை உஹனாவில் நடைபெற்ற “கிராமத்துடனான உரையாடல்” என்ற தலைப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இப்படியான கருத்தை வெளிப்படுத்தினார்.