இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

இதன்பின்பு நேற்று நடைபெற்ற 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், ரஹானே 22 ரன்கள் (70 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தபொழுது, கம்மின்ஸ் வீசிய பந்தில் போல்டானார். தொடர்ந்து வந்த விஹாரி 4 ரன்களும், ரிஷப் பந்த் 36 ரன்களும், புஜாரா 50 ரன்களும், அஸ்வின் 10 ரன்களும், சைனி 3 ரன்னும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், சிராஜ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முடிவில் ஜடேஜா 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் இந்திய அணி 100.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 244 எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை விட 94 ரன்கள் பின் தங்கி இருந்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் புகோஸ்விகி 10 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து டேவிட் வார்னர் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்னஸ் மற்றும் சுமித் ஆகியோர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.

இறுதியில் 3-ம் நாள் ஆட்டநேரமுடிவில் ஆஸ்திரேலியா அணி 29 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மார்னஸ் 47 ரன்களும், சுமித் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதன்படி இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக பேட்டிங் செய்தபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் 2-வது இன்னிங்ஸில் அவர் களமிறங்கவில்லை. ரிஷப் பந்துக்குப் பதிலாக சஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். ரிஷப் பந்துக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. மேலும் ஜடேஜா பேட்டிங் செய்தபோது அவருடைய இடது பெருவிரலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பேட்டிங் செய்தாலும், ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. ஜடேஜாவுக்குப் பதிலாக மயங்க் அகர்வால் பீல்டிங் செய்தார். ஜடேஜாவுக்கும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.