ரஜினிகாந்த் ரசிகர்கள் இன்று நடத்தும் போராட்டத்திற்கு 36 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி.

அரசியலுக்கு வரவிருப்பதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதம் கட்சி தொடங்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
பின்னர், உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கவில்லை என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
உடல்நிலை காரணமாக தான் எடுத்த இந்த முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், இதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.
ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்காக பல ஆண்டுகளாக காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இதனைத்தொடர்ந்து அரசியலில் நுழைய வேண்டாம் என்ற தனது முடிவை திரும்பப் பெறுமாறும், ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அறப் போராட்டத்தில் ஈடுபடுவதென அவரது ரசிகர்கள் முடிவெடுத்தனர்.
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இன்று நடத்தும் போராட்டத்திற்கு 36 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதன்படி, ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.