விமானத்தில் பயணித்த மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்பு.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து போண்டியானா நகரிற்கு நேற்று 62 பேருடன் புறப்பட்டுச் சென்று காணாமல் போன போயிங் ( Boeing 737-500) பதிவிலக்கம் (SJI182) Sriwijaya Air விமானத்தில் பயணித்த மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்துள்ளனர். ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு கைக்குழந்தையும் அடங்குகின்றன.
விமானம் புறப்பட்டு நான்காவது நிமிடத்திலே விமானம் தொடர்பான ராடார் சிக்னல் கிடைக்கவில்லை
மற்றொரு தகவல்படி 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், ஒரே நிமிடத்தில் 3 கிலோ மீற்றர் இறங்கியதாக ரேடார் சிக்னல் காட்டுகிறது.
விமானம் புறப்பட்டவுடன் விமானி, கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தை 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அடுத்த 4 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்னல் வெட்டியதை போல பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக விமானம் விழுந்து வெடித்துச்சிதறியதை பார்த்ததாக அருகே இருக்கும் தீவை சேர்ந்த மக்கள் ஊடகங்களுக் கூறியுள்ளனர். விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.
இதேபோல, கப்பலில் பயணித்திருந்த சிலரும், விமானம் பயங்கர வேகத்தில் கடலில் விழுந்து நொறுங்கியதை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய மக்கள், அருகே உள்ள தீவுகளுக்கோ, அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல, பெரும்பாலும் விமான போக்குவரத்தை நம்பியே உள்ளனர்.
2014-ம் ஆண்டில் ஏர் ஆசியா விமானம் இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டபோது கடலில் விழுந்தது இதில் 162 பேர் உயிரிழந்தனர்
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசிய விமானம் போயிங்737 மக்ஸ்8 ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் உயிரிழந்தனர்..
.இவ்வாறான நிலையில் இரண்டே ஆண்டிற்குள் மீண்டும் இப்படியொரு அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது, இந்தோனேசிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.