புதிய அரசமைப்பில் மாகாண சபை முறைமையை மாற்ற வேண்டும். சரத் வீரசேகர வலியுறுத்து
இலங்கை உள்விவகாரங்களில்
இந்தியா தலையிடவே முடியாது
புதிய அரசமைப்பில் மாகாண சபை முறைமையை மாற்ற வேண்டும் என்று சரத் வீரசேகர வலியுறுத்து
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு எந்த அருகதையும் கிடையாது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் உள்ளூராச்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
“புதிய அமைப்பு தேர்தல் முறைமைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும். இதற்கமைய மாகாண சபை முறைமையையும் மாற்ற வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தியா எங்கள் நட்பு நாடு என்பது உண்மை. இந்தியா சர்வதேச அரங்கில் எந்த விடயத்தையும் எழுப்பலாம். ஆனால், அவர்கள் எங்களை அதனைச் செய்யுமாறு கூறி நிர்ப்பந்திக்க முடியாது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை எங்கள் மீது திணித்துள்ளார்.
13ஆவது திருத்தததை நடைமுறைப்படுத்துமாறோ அல்லது மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறோ இந்தியா எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.
இந்தியா யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால், நாங்களே தீர்மானிப்போம். நாட்டின் அரசியல் தலைவர்கள் தீர்மானிப்பார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை காணப்படவில்லை. அதனால் அரசு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் வரை காத்திருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. புதிய அமைப்பு தேர்தல் முறைமைகளில் மாற்றத்தை மேற்கொள்ளும். இதற்கமைய மாகாண சபை முறைமையையும் மாற்ற வேண்டும்” – என்றார்