ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
இதற்கமைவாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தினை அவமதித்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் பிரதிவாதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பினை வழங்கிய மூவரடங்கிய நீதிபதி குழாம் அறிவித்துள்ளது.
அதன்படி, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாகவும், அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி குழாம் தீர்ப்பளித்துள்ளது.
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேராவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு, அலரி மாளிகையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் அநேகமானோர் மோசடியாளர்கள் என தெரிவித்திருந்தார்.
குறித்த அறிவிப்பின் ஊடாக ரஞ்சன் ராமநாயக்க இந்நாட்டு நீதிமன்ற அமைப்பின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவமதித்துள்ளதாகவும் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதன்படி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்து உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறு குறித்த முறைப்பாட்டின் ஊடாக உயர்நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.